இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் நாள் தொலைவில் இல்லை: பிரதமர் மோடி | PM Modi |

இந்த உச்சி மாநாடு இந்தியா–ஓமன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையையும், புதிய வேகத்தையும் அளித்துள்ளது...
மஸ்கட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி
மஸ்கட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி ANI
2 min read

இந்தியா தனக்கென ஒரு சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி பேசினார்.

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி கடந்த 15 அன்று ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் கடைசி பயணமாக பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக நேற்று (டிச. 17) மாலை ஓமனுக்கு சென்றடைந்தார். ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சயீத் நேரில் வரவேற்றார். தொடர்ந்து இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தார்கள்.

இதையடுத்து இந்தியா - ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

“இந்தியாவுக்கும் ஓமானுக்கும் இடையே உள்ள உறவு எப்போதும் நெருக்கமானதாகவும் உயிர்ப்புடனும் இருந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு வழிகாட்டியுள்ளது. நமது முன்னோர்கள் மரப் படகுகளில் பயணம் செய்து மஸ்கட், சூர் மற்றும் சலாலா போன்ற இடங்களுக்கு வந்தனர். வர்த்தகத்துடன் தொடங்கிய இந்தியா - ஓமான் இடையேயான உறவு, இன்று கல்வியால் மேலும் வலுப்பெற்றுள்ளது. இங்குள்ள இந்தியப் பள்ளிகளில் சுமார் 46,000 மாணவர்கள் பயில்வதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானில் வசிக்கும் பல சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளும் இதில் அடங்குவர். ஓமானில் இந்தியக் கல்வி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது நமது உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

இப்போது, ​​இந்தியா தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை 'ககன்யான்' திட்டம் மூலம் அனுப்ப உள்ளது. இந்தியா தனக்கென ஒரு சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தியாவின் விண்வெளித் திட்டம் தன்னுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஓமானின் விண்வெளி லட்சியங்களுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். 6-7 ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளி ஒத்துழைப்பு குறித்த ஓர் ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டோம். இஸ்ரோ, இந்தியா-ஓமான் விண்வெளி இணையதளத்தை உருவாக்கியுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விண்வெளிப் பங்களிப்பால் ஓமானின் இளைஞர்களும் பயனடைய வேண்டும் என்பதே இப்போது எங்களின் முயற்சியாகும். இஸ்ரோ 'யுவிகா' என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை நடத்துகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்வெளி அறிவியலுடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஓமானி மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதே இப்போது எங்களின் முயற்சி.

இந்த உச்சி மாநாடு இந்தியா–ஓமன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையையும், புதிய வேகத்தையும் அளித்து, அதை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உதவும். இதில் உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பங்கு உள்ளது. இன்று நமது தூதரக உறவுகள் 70 ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இது வெறும் 70 ஆண்டுகளுக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல. இது நமது பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை வளமான எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு மைல்கல்” என்றார்.

Summary

The day is not far when India will have its own Space Station said PM Modi at the interaction with the Indian community and students in Muscat

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in