
ரஷ்யாவில் நடந்துவரும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே, 5 வருடங்களுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
கடைசியாக 2019 அக்டோபரில் மோடியும், ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு கோவிட் பெருந்தொற்றின் உலகளாவிய அவசர நிலை முதல்முறையாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதன் பின் மே 2020-ல் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்தியா-சீனா சர்வதேச எல்லையில் அத்துமீறலை நிகழ்த்தி, இந்திய பகுதிக்குள் புகுந்தனர் சீன ராணுவ வீரர்கள். அதனை தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருதரப்பினரும் ராணுவ துருப்புகளை குவிக்க ஆரம்பித்தனர்.
பிறகு ஜூன் 15, 2020-ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் ஏறத்தாழ 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே எல்லைப் பகுதியில் பதற்றம் குறைந்தது.
இந்நிலையில் நேற்று (அக்.22) ரஷ்யாவில் தொடங்கிய 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாட்டு அரசு அதிகாரிகள், வெளியுறவு அமைச்சர்கள் சகிதமாக இன்று பிரதமர் மோடியும், அதிபர் ஷின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி பேசியவை பின்வருமாறு,
`உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 5 வருடங்களுக்குப் பிறகு நமக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு இரு நாட்டு மக்களை தாண்டி, உலக அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமானதாகும்.
நமது எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுவதை உறுதி செய்வது நமது முன்னுரிமையாக இருக்கவேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்வுகள் ஆகியவை நமது இருதரப்பு உறவுகளின் அடிப்படையாக இருக்கவேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைகளை திறந்த மனதுடன் நடத்துவோம் எனவும், நமது பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெறும் எனவும் நான் நம்புகிறேன்’ என்றார்.
2019-க்குப் பிறகு, 2022 நவம்பரில் இந்தொனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டிலும், 2023 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோஹானஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், அதிபர் ஜின்பிங்கும் சந்தித்திருந்தாலும், கடந்த 5 வருடங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே அரசுரீதியிலான பேச்சுவார்த்தை நடப்பது இதுவே முதல்முறையாகும்.