கப்பல் பாதைகள் திறந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தை ஈரான் அதிபரிடன் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மகன் முஜ்தபா காமெனி உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், அலி காமெனியின் இறப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது மட்டுமன்றி தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன்கள் உள்ளிட்டவற்றை ஏவி தாக்கி வருகிறது. மறுபுறம் ஈரானை இஸ்ரேல் - அமெரிக்கப் படைகளும் தாக்கி வருகின்றன.
முடக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து 22 நாள்களாக மத்திய கிழக்கில் நடந்து வரும் இந்தப் போர்ச்சூழல் காரணமாக எரிசக்திக்காக மத்திய கிழக்கை நம்பியுள்ள நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதற்கிடையில் கடந்த மார்ச் 12 அன்று இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியது. அதையடுத்து இதுவரை 3 எண்ணெய் கப்பல்கள் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சரக்குகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளன.
உலகத் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இதற்கிடையில் பிரதமர் மோடி உலக தலைவர்களுடன் தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கடந்த மார்ச் 19 அன்று தெரிவித்தார். குவைத் இளவரசர் அல் கலீத் அல் ஷபாவுடன் பிரதமர் மார்ச் 18 அன்று பேசி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். அதேபோல் வெளியுறவுத்துறையும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை குறித்து வலியுறுத்தி வருகிறது.
ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியானுடன் பேசினேன். ஈத் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பைத் தர வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தோம். ஈரானில் உள்ள முக்கிய உட்கட்டமைப்புகளீன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தேன். இத்தகைய தாக்குதல்கள் நாடுகளின் நிலைத்தன்மையை அச்சுறுத்துவதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளையும் பாதிக்கின்றன. கடல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் பாதைகள் திறந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன். ஈரானில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
PM Modi has said Spoke with Iran President Dr. Masoud Pezeshkian and conveyed Eid and Nowruz greetings. We expressed hope that this festive season brings peace, stability and prosperity to West Asia.