பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட விரைவு ரயில் கிளர்ச்சியாளர்கள் குழுவால் கடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவர் நோக்கி ஜாஃபர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. ரயில் சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின்படி ரயில் ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் ரயில் தண்டவாளங்களை வெடிகுண்டு மூலம் தகர்த்து ரயிலை நிறுத்தியுள்ளார்கள். இதன்பிறகு, இவர்கள் ரயிலில் ஏறியுள்ளார்கள். ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள், 400-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணித்துள்ளார்கள். பலூச் விடுதலை ராணுவம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
"ராணுவம் ஊடுருவினால், அதற்கு நிகரான தக்க பதிலடி கொடுக்கப்படும். ஏற்கெனவே 6 ராணுவப் படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் பலூச் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு நாங்கள் முழுப் பொறுப்பை ஏற்கிறோம்" என்று பலூச் விடுதலை ராணுவம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகள் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் இதுகுறித்து கூறுகையில், "இந்தச் சூழலை எதிர்கொள்ள பலூசிஸ்தான் அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து அரசு அமைப்புகளையும் திரட்டியுள்ளது" என்றார்.
பலூச் விடுதலை ராணுவம் என்பது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ஒரு கிளர்ச்சியாளர்கள் குழு. பலூசிஸ்தானின் வளமான எரிவாயு மற்றும் கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுகிறது என்பது அவர்களுடையக் குற்றச்சாட்டு. பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை.