
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய பாதுகாப்புப் படைகளால் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அமைந்திருந்த இந்த பயங்கரவாத உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவை கணிசமான நிதியுதவி மற்றும் ஆதரவை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்.ஓ.சி) அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் உயர் தொழில்நுட்பம் கொண்ட, சிறிய பயங்கரவாத முகாம்களை அமைக்க முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன என்று இந்தியா டுடே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இத்தகைய உத்தி செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மீண்டும் கட்டப்பட்டு வரும் முகாம்கள் லுனி, புட்வால், தைபு போஸ்ட், ஜமிலா போஸ்ட், உம்ரான்வாலி, சாப்ரார், ஃபார்வர்ட் கஹுடா, சோட்டா சக் மற்றும் ஜங்லோரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. ரேடார் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை எதிர்கொள்ள இந்த முகாம்களில் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள நான்கு பயங்கரவாத ஏவுதளங்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் குழுமுவதை குறைப்பதற்கும், வான்வழி தாக்குதல் நடக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்கும், பெரிய முகாம்களை சிறிய முகாம்களாகப் பிரிப்பதற்கான உத்தியை பாகிஸ்தான் உளவு அமைப்பு பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது.