
கடந்த மே 10-ம் தேதி அதிகாலை நேரத்தில் பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் வேறு சில இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதை, ஒரு பொது நிகழ்வில் வைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் ஷெரிஃப், இந்தியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தனக்கு தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.
`மே 9-10 இடைப்பட்ட இரவில், அதிகாலை 2:30 மணியளவில், ஜெனரல் ஆசிப் முனீர் பாதுகாப்பான ஒரு தொலைபேசி மூலம் என்னை அழைத்து, இந்தியா பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை ஏவியதாகக் கூறினார். ஒன்று நூர் கான் விமானப்படை தளத்திலும், வேறு சில பிற பகுதிகளையும் தாக்கியுள்ளது’ என்று பிரதமர் ஷெரிஃப் பேசியுள்ளார்.
ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படை தளம், பாகிஸ்தானின் வான் நடவடிக்கைகளுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மையமாகும்.
இது முன்னர் சக்லாலா விமானப்படை தளம் என்று அழைக்கப்பட்டது. 1971 இந்திய-பாகிஸ்தான் (வங்கதேச விடுதலை) போரின்போது இந்திய பாதுகாப்புப்படைகளால் இந்த தளம் குறிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அமித் மால்வியா, `நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பல இடங்களில் இந்தியா குண்டுவீச்சு நடத்தியதாக ஜெனரல் அசிம் முனீர் அதிகாலை 2.30 மணிக்கு தன்னை அழைத்து தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், ஒப்புக்கொள்கிறார். இது ஆபரேஷன் சிந்தூரின் அளவு, துல்லியம் மற்றும் துணிச்சலைப் பற்றி நிறையவே கூறுகிறது’ என்றார்.