நடுநிலையான விசாரணைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவிப்பு
ANI

நடுநிலையான விசாரணைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவிப்பு

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது.
Published on

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில், நடுநிலையான விசாரணைக்குப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் பேசியவதாவது,

`அண்மையில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றுமொரு உதாரணமாகும். இது முடிவுக்கு வரவேண்டும். ஒரு பொறுப்பான நாடாக, எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. பாகிஸ்தான் எப்போதுமே பயங்கரவாதத்தைக் கண்டித்து வருகிறது.

அதேநேரம், கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியாவின் ஊடுருவலுக்கு வழங்கப்பட்ட உறுதியான பதிலடியைப்போல, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்காகவும் பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது’ என்றார்.

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதற்கு மறுநாள், பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

எல்லை தாண்டிய ஊடுருவல்களில் ஈடுபட்டுவரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் தந்து நிதியுதவி அளிப்பதாக ஆரம்பம் முதலே குற்றம்சாட்டப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அடில் அஹமத் தோக்கர், பாகிஸ்தானின் பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இராணுவப் பயிற்சி பெற்று, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பல பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக, உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in