அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புக்குத் தடை: பாகிஸ்தான் பிரதமர்

இனி தூதரக அளவிலான நிகழ்வுகளுக்கு மட்டுமே சிவப்பு கம்பள வரவேற்பு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புக்குத் தடை: பாகிஸ்தான் பிரதமர்

அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புக்குத் தடை விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளதாக ஏஆர்எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வருகையின்போது சிவப்பு கம்பள வரவேற்பு நடைமுறை பின்பற்றப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பிரதமர், இந்த விஷயத்தில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சிவப்பு கம்பள வரவேற்புக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் இனி தூதரக அளவிலான நிகழ்வுகளுக்கு மட்டுமே சிவப்பு கம்பள வரவேற்பு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சிக்கன நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், தங்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை விட்டுத்தர முடிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முன்னதாக பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி, நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இனி சம்பளம் மற்றும் இதர அரசு சலுகைகளை தாம் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

சமீபத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தான் 2023 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்துள்ளதால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்ததாக டான் பத்திரிகை கூறியிருந்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 100 –க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளுக்கான நடைமுறைகளை ஆய்வு செய்து 740 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள், மானிய உதவிகள் இல்லாமல் பாகிஸ்தானில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் கடினமான சூழலில்  வாழ்க்கை நடத்தி வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in