சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் பலமுறை கடிதம்!

ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட உலக வங்கியிடம், இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் பலமுறை கடிதம்!
ANI
1 min read

கடந்த ஏப்ரல் 22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் 1960-ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்ததை இந்தியா நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா நிறுத்தியது. இதனால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி இந்தியாவிற்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நீர் வள அமைச்சகத்தால் இந்திய அரசுக்கு எழுதப்பட்ட முதல் நான்கு கடிதங்களில், அதன் செயலாளர் சையத் அலி முர்தாசா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். பின்னர், அமைச்சகத்தால் எழுதப்பட்ட மேலும் மூன்று கடிதங்களில் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துமாறு முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட கடிதங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்ததாக இந்தியா டுடே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட உலக வங்கியிடம், இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. எனினும், இதில் தலையிட உலக வங்கி மறுப்பு தெரிவித்துவிட்டது என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது குறித்து அடிக்கோடிட்டு, `தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in