

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை குறித்த வதந்திகளை அடியாலா சிறை நிர்வாகம் புதன்கிழமை மறுத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் கடந்த ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். சிறையிலுள்ள இம்ரான் கான் உடல்நிலை குறித்து பாகிஸ்தானில் பல்வேறு வதந்திகள் பரவின. இதன் காரணமாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சிறை வளாகம் வெளியே கூடத் தொடங்கினார்கள். இம்ரான் கான் கொல்லப்பட்டாரா என்ற நிலை வரை வதந்திகள் பரவின.
இந்நிலையில் ராவல்பிண்டியில் சிறையில் உள்ள இம்ரான் கான், பூரண உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக அடியாலா சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
"அடியாலா சிறையிலிருந்து இம்ரான் கான் மாற்றப்படுகிறார் என்ற தகவல்களில் துளியளவும் உண்மை இல்லை. அவர் முழு உடல்நலத்துடன் உள்ளார். முழுமையான மருத்துவ கவனிப்புகளைப் பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளது என்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை" என்று சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறுகையில், முந்தைய சிறைவாசிகளுடன் ஒப்பிடுகையில் மிக சௌகரியமாகவே இம்ரான் கான் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
"இம்ரான் கானுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைப் பாருங்கள். நட்சத்திர விடுதிகளில் கூட அந்த உணவு கிடைக்காது. அவருக்கு தொலைக்காட்சி, உடற்பயிற்சிக்கான சாதனங்கள், இரு படுக்கைகள், வெல்வெட் மெத்தை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நாங்கள் குளிர்ந்த தரைகளில் தூங்கினோம். சிறை உணவை உண்டோம். வெண்ணீர்கூட இல்லாமல் ஜனவரியில் இரு போர்வைகள் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டன" என்று கவாஜா ஆசிஃப் கூறினார்.
Pakistan Jail Administration gave clarification over Former PM Imran Khan's health status
Imran Khan | PTI | Pakistan | Khawaja Asif |