
தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக இம்ரான் கானின் `பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப்’ (பிடிஐ) கட்சியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார், `பிடிஐ கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து நிதிகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. இனி பாகிஸ்தானும், பிடிஐ கட்சியும் இணைந்திருக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் பிடிஐ கட்சிக்குத் தடைவிதிக்க மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்’ என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், `பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப்’ அரசியல் கட்சியை கடந்த 1996-ல் பாகிஸ்தானில் தொடங்கினார். 1996-ல் கட்சியைத் தொடங்கினாலும், 18 வருடங்கள் கழித்து 2018-ல் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான்.
தன் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்துடன் கடுமையாக முரண்பட்ட இம்ரான் கான், 2022-ல் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சொல்லப்போனால் பாகிஸ்தான் வரலாற்றில் தகுதி நீக்கம் ஒரே பிரதமர் இம்ரான் கான் மட்டுமே.
கடந்த வருடம் மே மாதம் அரசாங்க பரிசுப் பொருட்கள் தொடர்பாக இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 3 வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மேல்முறையீடு செய்த பிறகு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இம்ரான் கானுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ராவல்பிண்டி சிறையில் உள்ளார் இம்ரான். தற்போது பாகிஸ்தான் நாட்டில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஷ் ஷெரீப் தற்போது பிரதமாகப் பதவி வகித்து வருகிறார்.