பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே 2-ம் முறை: ஃபீல்டு மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற அசிம் முனீர்!

ராணுவத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்பு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக அவர் செயல்பட்டு வந்தார்.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே 2-ம் முறை: ஃபீல்டு மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற அசிம் முனீர்!
ANI
1 min read

இந்தியாவுடன் மிகப்பெரிய அளவிலான ராணுவ மோதல் வெடித்த சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயரிய ராணுவப் பதவியான ஃபீல்டு மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அசிம் முனீரை ஃபீல்டு மார்ஷலாக பதவி உயர்வு செய்வதற்கான முன்மொழிவுக்கு அந்நாட்டின் மத்திய அமைச்சரவை இன்று (மே 20) ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறித்து ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 29 நவம்பர் 2022 முதல், பாகிஸ்தான் ராணுவத்தின் 11-வது தளபதியாக அசிம் முனீர் செயல்பட்டு வருகிறார். நவம்பர் 2024-ல் மூனீரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

ராணுவத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்பு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக அவர் செயல்பட்டு வந்தார். அந்த சமயம், புல்வாமா தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்தது.

பொதுமக்கள் மீதான விசாரணைகளை இராணுவ நீதிமன்றங்கள் மேற்கொள்வதற்கு ஆதரவாக அண்மையில் தீர்ப்பளித்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்திற்கு மேலும் சுதந்திரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஃபீல்டு மார்ஷலாக அசீம் முனீருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ராணுவ சர்வாதிகாரியாகவும், பாகிஸ்தானின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருந்த அயூப் கானுக்கு மட்டுமே அந்நாட்டின் ஃபீல்டு மார்ஷல் கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.

அயூப் கானை தொடர்ந்து, பாகிஸ்தான் வரலாற்றில் ஃபீல்டு மார்ஷல் கௌரவத்தைப் பெறும் 2-வது நபர் என்ற பெருமை தற்போது அசீம் முனீர் வசமாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in