இஸ்லாமாபாத் கார் குண்டு வெடிப்பு: இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் குற்றம்சாட்டும் பாகிஸ்தான் | Islamabad |

ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டும்...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் (கோப்புப்படம்)
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் (கோப்புப்படம்)
1 min read

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆப்கானிஸ்தானையும் இந்தியாவையும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மதியம் திடீரெனக் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நீதிமன்றத்திற்கு அருகில் இருந்த சுமார் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்குப் பிறகு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அங்கிருந்த மற்றவர்கள் கட்டடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தில்லி செங்கோட்டை அருகே நடந்தது போலவே பாகிஸ்தானிலும் காரில் குண்டு வெடித்த நிலையில், இதுவும் தற்கொலைத் தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், இந்தத் தாக்குதலைச் செய்தது ஆப்கானிஸ்தான் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

“இப்போது நாம் போர்ச் சூழலில் உள்ளோம். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் மீது ஆப்கானிஸ்தான் நடத்தியிருக்கும் தாக்குதலைக் கவனிக்க வேண்டும். எங்கள் மக்களைப் பாதுகாக்க ராணுவம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இது போருக்கான அழைப்பு. ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் இந்தப் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “இது பாகிஸ்தானின் நிலைத்தன்மையைக் குலைக்கும் வகையில் இந்தியாவுக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் குற்றம்சாட்டியுள்ளது.

Summary

Pakistan has accused both Afghanistan and India in the car bomb explosion incident near the Islamabad High Court in Pakistan.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in