
ஏறத்தாழ இரண்டாண்டு காலமாக சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலை குறித்து, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் உயர்மட்டத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜூன் 11-ம் தேதி ஜாமின் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அவரது பிடிஐ கட்சியின் தலைவர் கோஹர் அலி கான் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ராணுவத் தளபதி அசிம் முனீர் இறுதியாக பின்வாங்கியிருப்பதை இது குறிப்பதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தனது பிடிஐ கட்சியின் தலைவராக கோஹர் அலி கானை இம்ரான் கான் நியமித்த சில நாட்களுக்குப் பிறகு அவர் இத்தகைய தகவலை வெளியிட்டுள்ளார். சிறைக்குள் இருந்தபடி, ஆளும் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை வழிநடத்த இம்ரான் கான் உறுதியளித்திருந்த நிலையில், அவரது விடுதலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
72 வயதான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 2023 முதல் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யுமாறு அப்போதிருந்தே பல்வேறு போராட்டங்களை பிடிஐ முன்னெடுத்து வருகிறது.
மேலும், அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷாரா பீவிக்கு கடந்த ஜனவரி 2024-ல் 14 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் மற்றும் புஷாரா பீவி ஆகியோரின் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரும் மனுக்களை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜூன் 11-ல் விசாரிக்க உள்ளது. இந்த தேதியை குறிப்பிட்டுதான் பிடிஐ தலைவர் கோஹர் அலி கான், இம்ரான் கான் தம்பதியினருக்கு அது ஒரு முக்கியமான நாள் என்று விவரித்துள்ளார்.
பொதுமக்கள் இடையே தனக்குப் பெருகிவரும் ஆதரவை அடுத்து நாடு தழுவிய போராட்டங்களை சிறையில் இருந்து நடத்த இம்ரான் கான் முடிவெடுத்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூரால் ஏற்கனவே பின்னடவை சந்தித்த ராணுவத் தளபதி அசிம் முனீர், மேலும் அழுத்தத்தை உணர்ந்து, தனது பரம எதிரியுடன் சமாதானமாகப்போகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.