பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு

"தற்கொலைத் தாக்குதலைப்போல தெரிகிறது.
பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு
1 min read

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குண்டுவெடிப்பின்போது ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஒரு ரயில் தயாராக இருந்ததாகச் செய்திகள் வருகின்றன. உயிரிழந்தவர்கள் தவிர 40 பேர் காயமடைந்துள்ளார்கள்.

பலூசிஸ்தான் ஐஜி மௌஸம் ஜா அன்சாரி கூறுகையில், "ராணுவ வீரர்கள் தான் தாக்குதலின் குறி" என்றார்.

குவெட்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் முஹமது பலூச் சம்பவம் குறித்து கூறியதாவது:

"தற்கொலைத் தாக்குதலைப்போல தெரிகிறது. தற்போதைய நிலையில் எதையும் உறுதியாகக் கூற முடியாது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பின்போது அங்கு 100 பேர் இருந்தார்கள்" என்றார்.

பலூசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த படையைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது இந்த அமைப்பு.

பலூசிஸ்தான் மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட், "காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் குழு சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் நிறைய பேர் மோசமாக இருப்பதாகக் கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்" என்றார்.

பலூசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக கூறிய ஷாஹித் ரிண்ட், "இது உண்மைதானா என விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பைப் பார்க்கும்போது தற்கொலைத் தாக்குதலைப்போல உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in