
பாகிஸ்தான் ராணுவப் படைத் தலைவர் அசிம் முனீர் அமெரிக்காவிலிருந்தபடி, அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவப் படைத் தலைவர் அசிம் முனீர் அமெரிக்காவில் உள்ளார். தொழிலதிபர் அட்னான் அசாத் இவருக்கு இரவு உணவு விருந்து அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த விருந்தில் அசிம் முனீர் பேசியவை என ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, "நாம் அணு ஆயுதத்தைக் கொண்டுள்ள நாடு. நாம் வீழ்ச்சியடைய நேரிட்டால், நம்முடன் பாதி உலகை இழுத்துச் செல்வோம்" என்று முனீர் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்துள்ள முடிவு, 25 கோடி மக்களைப் பட்டினியில் ஆழ்த்தும் என்றும் முனீர் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், "இந்தியா அணையைக் கட்டுவதற்காகக் காத்திருப்போம். அவர்கள் அணையைக் கட்டினால், 10 ஏவுகணைகள் மூலம் அதை அழித்துவிடுவோம். சிந்து நதி நீர் ஒன்றும் இந்தியர்களின் குடும்பச் சொத்து கிடையாது. நம்மிடம் ஏவுகணைகளுக்கும் பஞ்சம் கிடையாது" என்றும் அசிம் முனீர் பேசியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜூன் 18 அன்று அமெரிக்காவுக்குச் சென்ற அசிம் முனீர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அசிம் முனீரின் அமெரிக்கப் பயணம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
Pakistan | Asim Munir | Indus River | India Pakistan | US | India US | US Pakistan | Pakistan US |