லெபனானில் வெடித்த பேஜர்கள்: இஸ்ரேல் காரணமா? நடந்தது என்ன?

பேஜர்கள் லெபனானில் இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்பு, சாதனங்களில் வெடிபொருள்களை..
பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
2 min read

லெபனானில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மற்றும் காஸாவிலுள்ள ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து, லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா ஆயுதக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹெஸ்புல்லா ஆயுதக் குழு காஸாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு ஆயுதக் குழுக்களும் இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாகவே கருதப்பட்டு வருகின்றன. ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.

வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்

இந்த நிலையில்தான் லெபனானில் ஏறத்தாழ ஆயிரம் பேஜர்கள் வெடித்துள்ளன. இதில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். லெபனானுக்கான ஈரான் தூதர் கூறுகையில், ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்ததில் 2,800 பேர் காயமடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். லெபனான் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பேஜர்கள் வெடித்துள்ளன.

பேஜர்கள் பயன்பாடு

ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் பெரும்பாலும் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்துவது பேஜர்கள்தான். மொபைல் ஃபோன்களை பயன்படுத்தினால், இருக்குமிடத்தை எளிதாகக் கண்டறிய முடியும், ஹேக் செய்யப்படலாம் போன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஹெஸ்புல்லா குழுவினர் பேஜர்களையே தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஹெஸ்புல்லாவினரைக் குறிவைக்கவே இஸ்ரேல் பேஜர்களை வெடிக்கச் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஜர்கள் வெடித்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.

பேஜர்கள் வெடித்தது எப்படி?

வெடித்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டைச் சேர்ந்த கோல்ட் அப்போலோ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹெஸ்புல்லா குழு இந்த நிறுவனத்திடமிருந்துதான் பேஜர்களை வாங்கியுள்ளது. அண்மையில் நிறைய பேஜர்களை ஹெஸ்புல்லா குழு இந்த நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் இந்த வெடிப்புக்குக் காரணமாக இருக்கக்கூடும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த பேஜர்கள் அனைத்தும் லெபனானில் இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்பு மொஸ்ஸாத் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கக்கூடும்.

பேஜர்களின் பேட்டரிகளில் சிறிய அளவில் வெடிபொருள்களை நிரப்பியிருக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. பேஜர்களில் வெடிபொருள்கள் இருக்கும்போது, சாதனங்கள் அதிக வெப்பமடைந்தால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரிமோட் அல்லது ரேடியோ சிக்னல் மூலம் பேட்டரிகளை பேஜர்களிலுள்ள பேட்டரிகளின் வெப்பத்தை அதிகரிக்க முடியும். வெப்பம் அதிகரிக்கும்போது வெடிபொருள்கள் இருப்பதால் பேட்டரிகள் வெடிக்கக்கூடும்.

இதுவே பேஜர்கள் வெடித்ததன் பின்னணி எனக் கூறப்படுகிறது.

கோல்ட் அப்போலோ நிறுவனம் சொல்வது என்ன?

ஹங்கேரி தலைநகர் பூடபெஸ்ட்டைச் சேர்ந்த பிஏசி கன்சல்டிங் நிறுவனம்தான் இந்த சாதனங்களைத் தயாரித்துள்ளதாக கோல்ட் அப்போலோ நிறுவனம் கூறுகிறது. கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமம் இந்த நிறுவனத்துக்கு இருப்பதாக கோல்ட் அப்போலோ தெரிவித்துள்ளது.

கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஏஆர்-924 ரக பேஜர்களை பிஏசி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்காக இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஹெஸ்புல்லா ஆயுதக் குழு அறிவித்துள்ளது.

போரில் நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலுக்கு மத்தியில் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஒரு மாபெரும் தாக்குதல் அரங்கேறியுள்ளது உலகளவில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in