
காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 19-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் காணப்படாத நிலையில் நடத்தப்படும் முதல் பெரிய தாக்குதல்.
காஸாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான இலக்குகளைக் குறித்து விரிவான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஹமாஸ் தரப்பில் கூறுகையில், "போரைத் தொடங்குவதாக நேதன்யாகு எடுத்த முடிவு என்பது பணயக் கைதிகளைத் தியாகம் செய்வதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இந்தத் தாக்குதல் குறித்து கூறுகையில், "தாக்குதலை நடத்துவதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் இஸ்ரேல் ஆலோசனை கேட்டது" என்றார்.
2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினர் 1,200 பேரைக் கொன்று 251 பேரைப் பணயக் கைதிகளாகக் கடத்திச் சென்றார்கள். இதற்குப் பதிலடி தரும் வகையில் இஸ்ரோல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதில் 48 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தார்கள். 1.12 லட்சம் பேர் காயமடைந்தார்கள்.
அண்மையில், பல்வேறு தலையீடுகளுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
போர் நிறுத்த ஒப்பந்தம் ஜனவரியில் தொடங்கிய நிலையில், 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டார்கள். இதற்குப் பதில் 33 இஸ்ரேலியர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த 5 பேர் ஹமாஸால் விடுவிக்கப்பட்டார்கள்.