மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: தாமதமான அனைத்து கட்சிக் குழுவின் வருகை!

ரஷ்ய நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவர் ஆண்ட்ரே டென்னிசோவ் தலைமையிலான எம்.பி.க்களை, அனைத்து கட்சிக்குழு சந்தித்தது.
மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: தாமதமான அனைத்து கட்சிக் குழுவின் வருகை!
1 min read

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ரஷ்ய அரசுக்கு விளக்கமளிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை ஏற்றிச் சென்ற விமானம், மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, சில மணிநேரம் வானில் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உக்ரைனால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதலால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமோடெடோவோ சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் புறப்பாடும், வருகையும் பல மணிநேரம் நிறுத்தப்பட்டது.

இதனால், எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு இருந்த விமானத்திற்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. வானில் வட்டமடித்தபடி இருந்த அந்த விமானம், சில மணி நேர தாமதத்திற்குப் பிறகே தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தலைமையிலான அதிகாரிகள் எம்.பி.க்கள் குழுவைப் பாதுகாப்பாக தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆபரேசன் சிந்தூர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு விளக்கமளிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த குழுவில், சமாஜ்வாதியின் ராஜீவ் ராய், தேசிய மாநாடு கட்சியின் மியான் அல்தாஃப் அஹமத், பாஜகவின் பிரிஜேஷ் சௌதா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பிரேம் சந்த், ஆம் ஆத்மியின் அஷோக் குமார் மிட்டல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று (மே 23) நண்பகலில், ரஷ்ய நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவர் ஆண்ட்ரே டென்னிசோவ் தலைமையிலான எம்.பி.க்களை, அனைத்து கட்சிக்குழு சந்தித்தது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகள் தொடர்பாக அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in