
வங்கதேசம், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்தவொரு கூட்டணியும் உருவாகவில்லை என்று முகமது யூனுஸின் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் கூறியுள்ளது. மூன்று நாடுகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு `அரசியல் ரீதியிலானது அல்ல’ என்றும் தகவல் தெரிவிக்கப்படுள்ளது.
ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பு குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து, வெளியுறவு ஆலோசகர் எம். தௌஹித் ஹொசைனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை’ என்று அவர் பதிலளித்தார்.
`இது அரசியல் மட்டத்தில் அல்ல, அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பு’ என்று ஹொசைன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் `எந்தவொரு கூட்டணியையும் உருவாக்கும் திட்டம் இல்லை’ என்றும் அவர் விளக்கமளித்தார்.
`இந்த சந்திப்பு இந்தியாவை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததா’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, `இது நிச்சயமாக மூன்றாம் தரப்பினரை குறிவைப்பது குறித்து அல்ல (அது குறித்து) நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும்’ என்றார்.
குன்மிங் நகரில் சீனா ஏற்பாடு செய்திருந்த சீனா-தெற்காசிய கண்காட்சி மற்றும் சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றம் நிகழ்வுகளுக்கு இடையே, வங்கதேசம், சீனா மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் `முறைசாரா முத்தரப்பு சந்திப்பை’ நடத்தியதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த சந்திப்பு குறித்து சீனாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டன.
மூன்று நாடுகளும் முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான விவாதங்களை நடத்தியதாகவும், `நல்ல அண்டை நாடு, பரஸ்பர நம்பிக்கை, சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சி’ ஆகியவற்றின் அடிப்படையில் இதை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டதாகவும், சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.