உறுப்பு நாடுகளுடன் அமர்ந்து ஐநா பொது சபையில் கலந்துகொண்ட பாலஸ்தீன்
ஐநா பொது சபையின் 79-வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்கில் நேற்று (செப்.10) தொடங்கியது. ஐநா சபையின் உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், உறுப்பு நாடுகளுடன் சமமாக அமர்ந்து இந்த 79-வது அமர்வில் கலந்துகொண்டது பாலஸ்தீன்.
ஐநா பொது சபையின் 79-வது அமர்வில் ஸ்ரீலங்கா மற்றும் சூடான் நாடுகளுக்கு இடையே பாலஸ்தீன் (State of Palestine) என்று குறிக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார் ஐநாவுக்கான பாலஸ்தீனின் தூதர் ரியாத் மன்சூர். ஐநா பொது சபையில் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் புதிய இருக்கை ஏற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொண்டார் எகிப்து நாட்டின் ஐநா தூதர்.
ஐநா பொது சபை இந்தப் புதிய இருக்கை ஏற்பாட்டுக்கு ஆட்சேபனை தெரிவித்தார் ஐநா சபைக்கான இஸ்ரேஸ் நாட்டின் தூதர். `ஐநாவின் உறுப்பினராக இருப்பதும், அதனால் கிடைக்கும் சலுகைகளும், இறையாண்மை உள்ள நாடுகளுக்கே பொருந்தும்’ என்று அவர் கருத்து தெரிவித்தார்.
தற்போது ஐநா சபையின் பார்வையாளராக உள்ளது பாலஸ்தீன். கடந்த மே 10-ல் ஐநா பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உறுப்பு நாடுகளுடன் அமர்ந்து பொது சபையில் பங்கேற்க பாலஸ்தீனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானம் இந்தியா உள்ளிட்ட 143 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அந்தத் தீர்மானத்தில் பாலஸ்தீனுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐநா பாதுகாப்பு சபைக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த 76-வது அமர்வில் ஐநா பொது சபையின் புதிய தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதமர் ஃபிலிமோன் யாங் பொறுப்பேற்றுக்கொண்டார்.