
மருத்துவத் துறைக்கான 2025 ஆண்டின் நோபல் பரிசு மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு கடந்த 1091 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
2025 ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 3 பேருக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேரி பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில்,
”மருத்துவத்துறையில் நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பத்தைத் தடுக்கும் வகையிலான புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைக் கண்டுபிடித்ததற்காக மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூவருக்கும் 2025-ன் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலாகச் செயல்படும் ரெகுலேட்டரி டி செல்களைக் கண்டுபிடித்து, புதிய ஆராய்ச்சித் துறைக்கான அடித்தளத்தை அமைத்துள்ளார்கள். இவர்களது கண்டுபிடிப்புகள் மருத்துவ சிகிச்சையில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளன.
இதன்மூலம் தன்னுடல் தாக்கு நோய்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியும். புற்றுநோக்கு மேலும் சக்திவாய்ந்த சிகிச்சைகளை அளிக்க முடியும். ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகான சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரன்கோவ், 1961-ல் பிறந்தவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சியாட்டிலில் உள்ள அமைப்பு சார் உயிரியல் நிறுவனத்தில் மூத்த திட்ட மேலாளராகப் பணியாற்றி வருபவர் ஆவார்.
பிரெட் ராம்ஸ்டெல் அமெரிக்காவில் 1960-ல் பிறந்தவர். 1987-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சான் பிரான்ஸிஸ்கோவின் சொனோமா பயோதெரபெடிக்ஸ் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகராக உள்ளார்.
ஜப்பானில் 1951-ல் பிறந்த ஷிமோன் சகாகுச்சி, கியோடோ பல்கலைக்கழகத்தில் 1983-ல் முனைவர் பட்டம் பெற்றவர். ஜப்பான் ஒசாகா பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராக உள்ளார்.
நோபல் பரிசு பெற்ற மூவருக்கும் 11 மில்லியன் ஸ்வீடன் குரோனர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது டாலர் மதிப்பில் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.