
அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் மாசுபாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட அணுசக்தி நிலையங்களில் கதிர்வீச்சு அளவுகள் அதிகரிக்குமா, மாசுபாடு அதிகரிக்குமா என அச்சம் நிலவியது.
ஈரானின் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, "அமெரிக்கா குறிவைத்த அணுசக்தி நிலையங்களில் மாசுபாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கதிர்வீச்சைக் கண்டறிவதற்கான கருவிகளில் கதிரியக்க கசிவுகள் எதுவும் பதிவாகவில்லை. எனவே, அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிப்பவர்களுக்கு எந்த அபாயமும் இல்லை" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணு சக்தி அமைப்பும் (ஐஏஇஏ) இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையங்களில் அமெரிக்காவின் தாக்குதல் நடத்திய பிறகு கதிர்வீச்சின் அளவுகள் அதிகரிக்கவில்லை என்பதை ஐஏஇஏ உறுதி செய்துள்ளது. கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் ஈரானில் நிலவும் சூழல் குறித்து மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்றும் ஐஏஇஏ தெரிவித்துள்ளது.