
ஏமன் மற்றும் இந்தியத் தலைவர்களின் விரிவான முயற்சிகளுக்குப் பிறகு, கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஏமன் தலைநகர் சனாவில் இருந்து வெளியான ஒரு காணொளியில் பிரபல கிறிஸ்துவ மதபோதகரும், உலகளாவிய அமைதி முயற்சி அமைப்பின் நிறுவனருமான கே.ஏ. பால் தகவல் தெரிவித்துள்ளார்.
`வலிமையான நடவடிக்கைகள் மற்றும் பிரார்த்தனை முயற்சிகளுக்காக’ காணொளியில் வாயிலாக ஏமன் தலைவர்களுக்கு கே.ஏ. பால் நன்றி தெரிவித்தார்.
கடந்த பத்து நாள்களாக இரவு பகலாக தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை காணொளியில் குறிப்பிட்டு பால் கூறியதாவது,
`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடவுளின் கிருபையால் அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார். தூதர்களை அனுப்பி, நிமிஷாவை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிஜிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.
ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் சிறையிலிருந்து ஓமன், ஜெட்டா, எகிப்து, ஈரான் அல்லது துருக்கி ஆகிய பகுதிகளுக்கு அவரை பாதுகாப்பாக அனுப்புவதற்கு இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
அதேநேரம், நிமிஷா பிரியாவுக்கான தண்டனை ரத்து குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்டது.
குறிப்பாக, ஏமனில் உள்ள சிக்கலான சட்ட நடைமுறையை எதிர்கொள்வதில் பிரியாவின் குடும்பத்தினருக்கு உதவ வெளியுறவு அமைச்சகம் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். ஷரியா சட்டத்தின் கீழ் கருணை அல்லது மன்னிப்புக்கான வழிமுறைகளை ஆராய்வதும் இதில் அடங்கும்.