இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 21-வது நூற்றாண்டின் ஹிட்லர்: வெனிசுலா அதிபர் மடூரோ விமர்சனம்
ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதலை கண்டித்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடூரோ, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 21-வது நூற்றாண்டின் ஹிட்லர் என்றும் விமர்சித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், 21-வது நூற்றாண்டின் ஹிட்லரான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைதி வழியில் வாழும் ஈரான் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வெனிசுலா அதிபர் மடுரோ விமர்சித்துள்ளதாக ஈரான் ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் 14 அன்று அதிபர் மடூரோ கூறியதாவது, `நாங்கள் போர் வேண்டாம் என்று கூறுகிறோம், ஈரான், பாலஸ்தீனம், ஏமன், சிரியா மற்றும் லெபனான் மக்கள் மட்டுமின்றி, அனைத்து இஸ்லாமிய மற்றும் அரபு மக்களுக்கான எங்கள் ஆதரவை அறிவிக்கிறோம்’ என்றார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை, `இது ஈரான் மக்கள் மீதான கிரிமினல் தாக்குதல், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் செயல், இது மத்திய கிழக்கை ஆபத்தான நிலைக்குத் தள்ளுகிறது, இதன் பின் விளைவுகள் பற்றி தெரியவில்லை’ என்று மடூரோ விவரித்தார்.
`மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கவும், அவர்களின் வளங்களைக் கைப்பற்றி, அந்த மக்களை அடிமைப்படுத்தவும் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. போர் தேவையில்லை, ஃபாசிசம் தேவையில்லை, நவீன-நாஜி சியோனிசம் தேவையில்லை’ என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உருவாக்கிய பூதம்தான் நெதன்யாகு என கடந்தாண்டு அவர் சரமாரியாக விமர்சித்திருந்தார்.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான கியூபா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக நியாயமற்ற முறையில் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.