
பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இன்று (பிப்.11) உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவித்தார்.
அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இன்று கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது,
`செயற்கை நுண்ணறிவு ஃபவுண்டேஷன் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். இந்த உச்சி மாநாட்டின் உத்வேகத்தை முன்வைத்து, அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது. மனித குலத்தின் வருங்காலத்தை வடிவமைக்கவிருக்கும் செயற்கை நுண்ணறிவு காலத்தின் துவக்கத்தில் நாம் இருக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்களைவிட இயந்திரங்கள் திறன் மிகுந்ததாக மாறக்கூடும் என்ற அச்சம் பலரிடம் நிலவுகிறது. ஆனால் நமது ஒருங்கிணைந்த வருங்காலத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இந்தப் பொறுப்புணர்வு நம் அனைவரையும் வழிநடத்த வேண்டும்’ என்றார்.
இந்தியப் பிரதமர், பிரான்ஸ் அதிபர் ஆகியோருடன் இந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஒபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நாளை (பிப்.12) கிளம்பி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் அமெரிக்க தலைவர் வாஷிங்டன் டி.சி.யில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கிறார்.