
ஈர நில வைரஸ் என்று அழைக்கப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் புதிய வகையிலான வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஒட்டுண்ணிக் கடியால் பரவுவது தெரியவந்துள்ளது.
கடந்த 2019-ல் சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தில் ஒட்டுண்ணிகள் கடித்தது மூலம், இந்த ஈர நில வைரஸால் 61 வயதான முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன என்று தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசனில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியவர் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து அப்போது வடக்கு சீனாவின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் 14,600 ஒட்டுண்ணிகள் கண்டறியப்பட்டன. மேலும் இவற்றில் 2 % அளவுக்கு ஈர நில வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகையான ஈர நில வைரஸ் ஆடு, பன்றி, குதிரை, எலிகள் போன்றவற்றிலும் உள்ளன.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் வசித்து வந்த 640 வனக்காவலர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் இந்த ஈர நில வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு 12 வனக்காவலர்களிடம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த ஈர நில வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட ஒரே மாதிரியான பாதிப்புகள் தென்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பாதிப்பிலிருந்து மீண்டனர். இதை அடுத்து ஆய்வுக்கூடத்தில் எலிகளுக்கு இந்த வைரஸை செலுத்தி சோதனை மேற்கொண்டதில் அவற்றின் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.