
எகிப்தில் நடக்கும் காஸா அமைதி உச்சி மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பின் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஏறத்தாழ 67,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் உள்ள காஸா நகரம் முழுவதும் சேதமடைந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக 20 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கை டிரம்பால் முன்வைக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த அக்டோபர் 11 போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதனடிப்படையில் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். பாலஸ்தீன பிணைக் கைதிகள் 2,000 பேரை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை இஸ்ரேல் சென்றார். அவருக்கு அந்நாட்டில் உணர்வுப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அதிபர் டிரம்ப், ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக விடுவித்த ஏழு பிணைக் கைதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், அடுத்தபடியாக எகிப்தில் நடைபெறும் காஸா அமைதி உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காஸா அமைதி உச்சி மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பங்கேற்கவில்லை என்ற தகவல் அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் முக்கியமான பண்டிகை விடுமுறை இன்று தொடங்குவதால் நெதன்யாகு இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் வந்திருந்த அதிபர் டிரம்பிடம் அதை நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், தொலைப்பேசி மூலம் எகிப்து பிரதமர் அல்-சிசியிடமும் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்காக அதிபர் டிரம்புக்கு நெதன்யாகு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று காஸா அமைதி உடன்படிக்கையை இறுதி செய்யவுள்ளன. மேலும், போருக்குப் பிறகான காஸாவின் உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்தியா சார்பில் கீர்த்தி வர்தான் சிங் பங்கேற்கிறார்.