
பென்னி கான்ஸ்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து தன் போர்க்கால அமைச்சரவையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ.
ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலும், இஸ்ரேல் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்த பென்னி கான்ஸ்ட், `பாலஸ்தீன் பகுதியான காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை’ எனக்கூறி கடந்த வாரம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ தலைமையில் பென்னி கான்ஸ்ட் உட்பட ஆறு அமைச்சர்கள் போர்க்கால அமைச்சரவையில் அங்கம் வகித்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மேற்கொண்டு வரும் போரை வழிநடத்தி வந்தனர். இந்நிலையில் பென்னி கான்ஸ்டின் ராஜினாமாவைத் தொடர்ந்துத் தன் போர்க்கால அமைச்சரவையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் நெதன்யாஹூ.
கடந்த வருடம் அக்டோபர் 7-ல் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆளும் அரசுக்குத் தன் ஆதரவை அளித்து, துறை இல்லாத அமைச்சராக நெதன்யாஹூ அரசில் அங்கம் வகிக்க ஆரம்பித்தார் அன்றைய எதிர்க்கட்சி உறுப்பினர் பென்னி கான்ஸ்ட். மையவாத கருத்தாக்கத்தை உடைய பென்னி கான்ஸ்டின் வெளியேற்றத்தால் இப்போதைய இஸ்ரேல் அரசில் வலதுசாரிக் கருத்துடையவர்கள் மட்டுமே அமைச்சர்களாக நீடிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து ஒரு சில முக்கிய அமைச்சர்களிடம் மட்டும் கலந்தாலோசித்துவிட்டு நெதன்யாஹூ போரைத் தொடர்ந்து நடத்துவார் என்று கூறப்படுகிறது.
மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள பாலஸ்தீனின் காஸா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். மத்திய காஸாவில் உள்ள நுசெய்ரத் அகதிகள் முகாமில் ஜூன் 18-ல் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.