
இன்று காலை (ஜூலை 24) நேபாளத்தின் காட்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.
சௌரியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானம் இன்று காலை, 2 விமானிகள் மற்றும் 17 பயணிகளுடன் நேபாளத்தின் பொக்காரா நகருக்குக் கிளம்பியது. அப்போது ஓடுபாதையை விட்டு வானை நோக்கிப் பறக்க விமானம் எத்தனித்தபோது விமானத்தின் இறக்கைகளில் ஒன்று தரையில் மோதியது.
இந்த மோதலால் விமானத்தில் உடனடியாகத் தீப்பிடித்தது. மேலும் இந்த விபத்தால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கிக் கொண்டே சென்று அருகே இருந்த பள்ளத்தாக்கில் சரிந்தது.
இந்த விபத்தில் ஒரு விமானி உட்பட 17 பயணிகள் மரணமடைந்தனர். இந்த விபத்தால் காயமடைந்த விமானிகளில் ஒருவரான மணீஷ் சங்கியா மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சௌரியா ஏர்லைன்ஸ் நிறுவனம் 20 வருடங்கள் பழைமையான, இரண்டு சிஆர்ஜெ-200 ரக விமானங்களை வைத்து நேபாளத்தில் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த வருடம் ஜனவரியில் 5 இந்தியர்கள் உட்பட 72 பயணிகளைச் சுமந்து சென்ற ஏட்டி ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று நேபாளத்தின் பொக்காரா நகரத்தில் விபத்துக்குள்ளானது.