
வங்கதேச தந்தை என்றழைக்கப்படும் முஜிபுர் ரஹ்மானின் படத்தை அந்நாட்டு கரன்சி நோட்டுகளில் இருந்து நீக்க இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேச நாட்டின் தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை கரன்சி நோட்டுகளில் இருந்து நீக்க, முஹமது யூனுஸ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. முஜிபுர் ரஹ்மானின் மகளும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா மக்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசின் முடிவுப்படி முஜிபுர் ரஹ்மானின் படம் இல்லாத 20, 100, 500 மற்றும் 1000 மதிப்பிலான கரன்சி நோட்டுகள், புதிதாக அச்சடிக்கப்படுவதாக வங்கதேச நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் புதிய கரன்சி நோட்டுகளில் புகழ்பெற்ற மசூதிகள் உள்ளிட்ட வங்காள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்கள் உபயோகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 20, 100, 500 மற்றும் 1000 ஆகிய கரன்சி நோட்டுகள் மாற்றப்பட்டு, அதன்பிறகு படிப்படியாக பிற கரன்சி நோட்டுகள் மாற்றப்படும் எனவும், அடுத்த 6 மாத காலத்திற்குள் புதிய கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்குள் வரும் எனவும் வங்கதேச மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்பு ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு சிலைகள், ஓவியங்கள் எனப் பல வழிகளிலும் முஜிபுர் ரஹ்மானை முன்னிலைப்படுத்திவந்தது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின்போது, முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் பலவும் போராட்டக்காரர்களால் தகர்க்கப்பட்டன.
இதை அடுத்து இதுவரை பின்பற்றப்பட்டு வந்த அந்நாட்டின் பொது அடையாளங்களை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு வழியாக இந்த முடிவை எடுத்துள்ளது வங்கதேசத்தின் இடைக்கால அரசு.