
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளார்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரத்துக்கு மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் சென்ற போயிங் ஸ்டார்லைனர் என்கிற புதிய விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக கடந்த ஜூன் மாதம் சென்ற இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்க நேரிட்டது. கடந்த செப்டம்பர் 7-ல் ஸ்டார்லைனர் விண்கலம் யாருமின்றி பூமிக்குத் திரும்பியது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடந்த வெள்ளியன்று எண்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா இன்று தெரிவித்துள்ளது. ஸ்பேக்ஸ்எக்ஸ் விண்கலத்தில் வந்த விண்வெளி வீரர்களை ஆரத்தழுவி வரவேற்றார் சுனிதா வில்லியம்ஸ். இதையடுத்து இரு நாள்களில் சுனிதா, வில்மோர் உள்பட நான்கு பேர் தங்களுடைய பயணத்தைத் தொடங்குவார்கள். வானிலையைப் பொறுத்து தேதி மாற்றப்படலாம். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ 10 விண்கலத்தின் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள 4 விண்வெளி வீரர்கள் அங்குத் தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். இவர்கள் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புவார்கள்.
பூமிக்கு சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் திரும்புவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.