வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க நாட்டில் இருக்கும் யானை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வன விலங்குகளைக் கொல்ல நமீபியா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்ரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நமீபியா நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கு உணவளிக்க வன விலங்குகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது நமீபிய அரசு.
கடந்த வாரம் நமீபியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் வறட்சி நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு உணவளிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள 723 வன விலங்குகளைக் கொல்லப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதில் 30 நீர்யானைகள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள், 100 சிறு மான்கள் ஆகியவை அடக்கம்.
எல் நினோவால் ஏற்பட்ட வறட்சியால் தெற்கு ஆப்ரிக்காவில் சுமார் 6.8 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பசிஃபிக் பெருங்கடலில் நிலவும் ஒருவிதமான கூடுதல் வெப்பநிலை 'எல் நினோ' என்று அழைக்கப்படும். எல் நினோவின்போது மத்திய மற்றும் கிழக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளின் மேற்பரப்பில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.
இந்த வெப்பநிலை அதிகரிப்பு பசிஃபிக் பெருங்கடல் மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்கத்தின் ஒரு பகுதியாக மழை பொழிவு குறையும். இத்தகைய மழைவு பொழிவு குறைவால் தெற்கு ஆப்ரிக்க நாடுகள் வறட்சியில் சிக்கியுள்ளன.