இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கிய நமல் ராஜபக்சே

2020 முதல் 2022 வரை இலங்கையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார் நமல் ராஜபக்சே
இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கிய நமல் ராஜபக்சே
1 min read

வரும் செப்டம்பரில் நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் தற்போது எம்.பி.யாகப் பதவி வகிக்கும் நமல் ராஜபக்சே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனாவார் லக்‌ஷ்மண் நமல் ராஜபக்சே. 38 வயதான நமல் ராஜபக்சே லண்டன் நகர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். 2010-ல் இருந்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஹம்பந்தோட்டாவின் எம்.பி.யாகப் பதவி வகித்து வருகிறார் நமல் ராஜபக்சே. மேலும் 2020 முதல் 2022 வரை இலங்கையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார் நமல் ராஜபக்சே.

இந்த வருடம் ஜனவரியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்தார் நமல் ராஜபக்சே. ராமர் கோவிலுக்குத் வந்ததை தனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுவதாக அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

2022-ல் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. பணவீக்கம் உச்சத்தை அடைந்ததால் மக்கள் போராட்டம் தொடங்கி ஒரு கட்டத்தில் கலவரம் உண்டானது. இதனால் அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்று அங்கிருந்தபடி தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். பிறகு ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் அதிபரானார்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 21-ல் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in