
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 300-க்கும் மேற்பட்ட அணுகுண்டு வெடிப்புக்கு ஈடான சக்தியை வெளியிட்டதாக சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டியளித்த புவியியலாளர் தகவல் தெரிவித்தார்.
நேற்றைக்கு முந்தைய தினம் (மார்ச் 29) மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக மியான்மர் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், அந்நாட்டைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. மேலும், மியான்மரின் 2-வது பெரிய நகரமாக மாண்டலேவை மையமாக வைத்து, பூமிக்கு உள்ளே 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிஎன்என் ஊடகத்திற்குப் பேட்டியளித்த புவியியலாளர் ஜெஸ் ஃபீனிக்ஸ், 334 அணுகுண்டு வெடிப்புக்கு ஈடான சக்தியை இந்த நிலநடுக்கம் வெளியிட்டதாகவும், மியான்மருக்குக் கீழே யுரேசியன் தட்டுடன் இந்திய தட்டு தொடர்ந்து உராய்ந்து வருவதால், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய பாதிப்பு பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் தகவல் அளித்துள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சியுடன் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முழு தகவல்கள் வெளிவரவில்லை என்றும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ராணுவ ஆட்சி மேலும் மோசமாக்கும் என்றும் ஜெஸ் ஃபீனிக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மியான்மருக்கு உதவிடும் வகையில், ஆப்ரேஷன் பிரம்மா என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி 15 டன் நிவாரணப் பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பு விமானத்தில் மியான்மருக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.