மும்பை தாக்குதல் தொடர்புடைய ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: அமெரிக்க நீதிமன்றம்

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா செயல்பட்டார்
மும்பை தாக்குதல் தொடர்புடைய ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: அமெரிக்க நீதிமன்றம்
1 min read

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களுக்கான 9-வது சர்க்யூட்டின் மேல்முறையீடு நீதிமன்றம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ஹூசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 11 நவம்பர் 2008-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை மாநகரின் 8 பகுதிகளில் துப்பாக்கிச் சூடும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் 29 நவம்பரில் முடிவுக்கு வந்தது. இதில் பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்கள் என மொத்தம் 175 நபர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதி அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டு, கசாப்புக்கு 2012-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மும்பை காவல்துறை பதிவு செய்த 405 பக்க குற்றப்பத்திரிக்கையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

2009-ல் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம் எஃப்.பி.ஐ சிகாகோவில் வைத்து தஹாவூர் ராணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து 14 வருடங்களாக அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராணாவை, இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசு அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை எதிர்த்து ராணா தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது கலிஃபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றம். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராணாவின் மனுவுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது மேல்முறையீட்டு நீதிமன்றம்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில், `1997-ல் இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in