விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படவுள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா!

இறுதி முயற்சியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராணா.
விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படவுள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா!
1 min read

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ஹூசைன் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

கடந்த 2008 நவம்பரில் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் 10 தீவிரவாதிகள். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் 29 நவம்பரில் முடிவுக்கு வந்தது. இதில் பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்கள் என மொத்தம் 175 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மும்பை காவல்துறை பதிவு செய்த 405 பக்க குற்றப்பத்திரிகையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

2009-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. சிகாகோவில் வைத்து தஹாவூர் ராணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராணாவை ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ராணா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கலிஃபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றம். இதனை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சான் ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராணா. ஆனால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இறுதி முயற்சியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராணா. அமெரிக்க அரசின் வாதத்தை ஏற்று, ராணாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

எனவே, குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமலில் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறார் தஹாவூர் ராணா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in