
வங்கதேசத்தின் இடைக்கால அரசை வழிநடத்திவரும் பொருளாதார அறிஞர் முஹமது யூனுஸ் அந்நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கும், சிறுபான்மையினர் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கும் சூத்திரதாரியாக உள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு ஷேக் ஹசினா பேசியவை பின்வருமாறு,
`படுகொலைகளுக்கு காரணமாக இன்று என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் உண்மையில், மாணவ ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து தீட்டிய திட்டத்தின்படி படுகொலைகளை மேற்கொண்டார் முஹமது யூனுஸ். அவர்கள்தான் சூத்திரதாரிகள். இவ்வாறு மரணங்கள் தொடர்ந்தால் இந்த ஆட்சி நீடிக்காது என லண்டனில் இருந்து தாரிக் ரஹ்மான் (முன்னாள் பிரதமர் கலீதா ஸியாவின் மகன்) கூறியுள்ளார்.
இன்றைக்கு ஆசிரியர்கள், காவலர்கள் என பலரும் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஹிந்துக்கள், பௌத்தர்கள், கிருஸ்துவர்கள் என அனைவரும் குறிவைக்கப்படுகின்றனர். கிருஸ்துவ தேவாலயங்களும், கோவில்களும் தாக்கப்படுகின்றன. எதனால் தற்போது வங்கதேசத்தில் சிறுபான்மையினர்கள் குறிவைக்கப்படுகின்றனர்?’ என்றார்.
தலைநகர் டாக்காவில் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை எட்டியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ல் வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா. இதனைத் தொடர்ந்து பொருளாதார அறிஞர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
இந்நிலையில், வங்கதேசத்தில் வசித்து வரும் ஹிந்துக்கள் மீது சமீபகாலமாக குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுகின்றது. அத்துடன் 3 ஹிந்துத் துறவுகள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.