மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1000-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவில் இருந்து 15 டன் நிவாரணப் பொருட்களுடன் மீட்புக்குழுவும், மருத்துவக்குழுவும் மியான்மருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1000-க்கும் மேற்பட்டோர் பலி!
1 min read

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தென்கிழக்காசிய நாடான மியான்மரின் சாகைங் நகரின் வடமேற்குப் பகுதியை மையமாக வைத்து நேற்று (மார்ச் 28) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து நிலநடுக்கத்தால் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,376 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு ராணுவம் இன்று காலை அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அந்நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கட்டடங்களும் சீட்டுக் கட்டுகளைப் போல சரியும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகின்றன.

அதேபோல, மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பாங்காக் ஆளுநர் சிட்டிபுண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியாவில் இருந்து 15 டன் நிவாரணப் பொருட்களுடன் மீட்புக்குழுவும், மருத்துவக்குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 50 பேர் கொண்ட மீட்புக் குழுவை அனுப்பிவைப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.

மேலும், நிவாரணப் பணிக்காக 5 மில்லியன் டாலர் ஒதுக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in