
அஸர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான பயணியர் விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரேயர் 190 ரக பயணியர் விமானம், அஸர்பைஜானின் தலைநகர் பாக்குவில் இருந்து கிளம்பி ரஷ்யாவின் செசன்யா பகுதியில் உள்ள க்ரோஸ்னியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. க்ரோஸ்னியில் பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.
அதன்பிறகு, கஜகஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானத்தை அக்டாவ் விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார் அதன் விமானி. சில நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த விமானம் திடீரென அக்டாவ் விமான நிலையத்திற்கு சில தூரத்திற்கு முன்பு விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் வரை உயிர் பிழைத்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. விபத்து நடந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் மீது பறவை மோதிய காரணத்தால், அதை கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலையத்திற்கு விமானி செலுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்திற்குள் அஸர்பைஜான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாகத் தகவல் தெரிவித்துள்ளது அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனம்.