பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ரஷ்யாவின் கஸன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று (அக்.22) தொடங்கி வரும் அக்.24 வரை, ரஷ்யாவின் கஸன் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரேஸில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்களும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்வதாக முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தலைநகர் தில்லியில் இருந்து விமானம் மூலம் ரஷ்யாவுக்குக் கிளம்பினார் பிரதமர் மோடி. பயணத்துக்கு முன்பு தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் அவர் பதிவிட்டவை பின்வருமாறு:
`ரஷ்ய அதிபர் மேதகு விளாதிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் 2 நாட்கள் பயணமாக கஸனுக்குச் செல்கிறேன்.
உலகளாவிய வளர்ச்சி, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, விநியோக சங்கிலிகள் உருவாக்கம், கலாச்சார மேம்பாடு போன்றவற்றுக்கான உரையாடல் மற்றும் விவாதத்துக்கான ஒரு முக்கியமான தளமாக விளங்கும் பிரிக்ஸ் அமைப்புடனான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது.
கடந்த வருடம் புதிய உறுப்பினர்களுடன் பிரிக்ஸ் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் உலகளாவிய நன்மைக்கானது. மாஸ்கோவில் ஜூலை 2024-ல் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டின் அடிப்படையில், இந்த கஸன் பயணத்தின்போது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். பிரிக்ஸ் அமைப்பின் பிற தலைவர்களையும் நான் சந்திக்கவுள்ளேன்’ என்றார்.
இந்நிலையில் பிற்பகல் 1 மணி அளவில் கஸன் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ரஷ்யா வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பிரதமர் மோடி.