ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ்: கமலா ஹாரிஸ்

இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸுடன் இணைந்து போட்டியிடுவது எனக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம். எது சாத்தியமானது என்ற அரசியலை ஹாரிஸ் நமக்குக் காண்பித்துள்ளார்
ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ்: கமலா ஹாரிஸ்
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தன் தரப்பு துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸை அறிவித்துள்ளார். 60 வயதான டிம் வால்ஸ் என்று அழைக்கப்படும் திமோத்தி ஜேம்ஸ் வால்ஸ் தற்போது அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.

வரும் நவம்பர் 5-ல் அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 5-ல் ஜனநாயகக் கட்சியின் 99 சதவீத பிரதிநிதிகளின் ஆதரவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) டிம் வால்ஸை ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார் கமலா ஹாரிஸ். `என்னுடன் இணைந்து போட்டியிட டிம் வால்ஸைக் கேட்டுக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். ஆளுநர், பயிற்சியாளர், ஆசிரியர், ராணுவ அதிகாரி என்று அவரைப் போல உழைக்கும் குடும்பங்களுக்காக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்’ என்று தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் ஹாரிஸ்.

`இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸுடன் இணைந்து போட்டியிடுவது எனக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம். இதில் நான் இணைகிறேன். எது சாத்தியமானது என்ற அரசியலை துணை அதிபர் ஹாரிஸ் நமக்குக் காண்பித்துள்ளார். முதல் நாள் நான் பள்ளிக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது. இதைச் செய்து முடிப்போம் நண்பர்களே. எங்களுடன் இணையுங்கள்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் டிம் வால்ஸ்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க பாதுகாப்புப் படையில் பணியாற்றியுள்ள டிம் வால்ஸ், அதன் பிறகு சமூக அறிவியல் ஆசிரியராகவும், கால்பந்தாட்டப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்த வால்ஸ் 13 வருடங்கள் (2007-2019) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் எம்.பி.யாகச் செயல்பட்டுள்ளார். ஜனவரி 2019-ல் தொடங்கி தற்போது வரை மின்னிசோட்டா மாகாணத்தின் ஆளுநராக அவர் பதவி வகித்து வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in