

ஈரானில் வன்முறைச் சூழல் நிலவும் நிலையில், அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகவும், அந்நாட்டின் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராகவும் கடந்த டிசம்பர் 28 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பெரும் கலவரம் வெடித்தது. போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரானின் பல பகுதியில் வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஈரானில் நிலவும் வன்முறைச் சூழல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும் 147 பேர் அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் வெளியேற உத்தரவு
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியான வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “ஈரானில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது அந்நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள், ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆவணங்களைக் கவனமாக வைத்திருக்க வேண்டும்
மேலும் ஈரானில் உள்ள தகவல் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், போராட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்கவும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், கலவர சூழல் குறித்த தகவல்களை உள்ளூர் ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்துக்கொள்ளவும் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இது குறித்த உடனடி தகவல்களுக்கு இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Ministry of External Affairs has advised all Indians in Iran to leave the country immediately due to the prevailing violent situation.