
2024 இந்திய தேர்தல் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு, இந்திய அரசு தெரிவித்த கண்டனத்தை அடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஜோ ரோகனின் பாட்காஸ்டில் சமீபத்தில் பேசிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், 2024-ல் இந்தியா உட்பட பல நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.
மார்ஜ் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்கு எதிர்வினையாற்றி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவில், `உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.
பிரதமர் மோடியின் தீர்க்கமான 3-வது வெற்றி, அவரது நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்குச் சான்றாகும். ஜுக்கர்பெர்க்கிடமிருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரப்படும் என தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரான பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரல், `2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த பல கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளுக்குப் பொருந்துகிறது, ஆனால் இந்தியாவிற்கு அல்ல. இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்க விரும்புகிறோம்’ என்றார்.