அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! | Donald Trump |

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் இதை வினோதமான முறையில் கையாண்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

டிரம்பின் செயல்பாடுகள் அமெரிக்க ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு மன்னரைப் போல டிரம்ப் செய்லபடுவதாக அமெரிக்க மக்கள் விமர்சிப்பதுண்டு. 'நோ கிங்ஸ்' என்ற பெயரில் டிரம்புக்கு எதிராக மக்கள் இரு முறை போராட்டம் செய்துள்ளார்கள். கடைசியாக கடந் ஜூன் மாதம் 2,100 இடங்களில் இந்தப் போராட்டம் கடைபிடிக்கப்பட்டது.

அடுத்த நான்கு மாதங்களில் டிரம்புக்கு எதிராக மக்கள் மீண்டும் திரண்டுள்ளார்கள். அமெரிக்கா முழுக்க சனிக்கிழமை பெரும் போராட்டம் வெடித்துள்ளது. சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பேரணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிரம்ப் ஆட்சியின் கீழ் இந்த ஆட்சியானது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாக போராட்டக்காரர்கள் கருதுகிறார்கள்.

வாஷிங்டன், பாஸ்டன், அட்லாண்டா, சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் என பல்வேறு மாகாணங்களில் பேரணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில், "போராடுவதைக் காட்டிலும் பெரிய தேசப்பற்று இருந்துவிட முடியாது", "பாசிசத்தை எதிர்ப்போம்" போன்ற பதாகைகள் ஏந்தப்பட்டுள்ளன. எனக்குத் தெரியாத ஓர் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருப்பதாக போராட்டக்காரர் ஒருவர் கூறுகிறார். சிஐஏ-வில் 20 ஆண்டுகாலம் பணிபுரிந்த போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளேன். பிரிவினைவாதத்துக்கு எதிராகப் போராடியுள்ளேன். ஆனால், அமெரிக்காவில் பிரிவினைவாதிகள் உள்ளார்கள். என் பார்வையில் ஓர் உள்நாட்டுப் போரை நோக்கி இவர்கள் நம்மை நகர்த்துகிறார்கள் என்று தோன்றுகிறது" என்றார்.

அமெரிக்க மக்களின் இந்தப் போராட்டமானது வீதிகளில் கொண்டாட்டங்களைப்போல அரங்கேறியிருக்கிறது. சுமார் 70 லட்சம் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தில் ஒட்டுமொத்த ஜனநாயகமே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது, மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே ஜனநாயகத்தைக் காக்க முடியும், பேச்சுரிமை மற்றும் குடியுரிமையின் முக்கியத்துவம், வெறுப்புப் பேச்சு கூடாது, அச்சம் தேவையில்லை, வெளிநாட்டினர் வரவேற்கப்படுவார்கள் உள்ளிட்டவை போராட்டக்காரர்களின் முழக்கங்களாக உள்ளன.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் இதை வினோதமான முறையில் கையாண்டுள்ளார். போராட்டம் குறித்து பேசும்போது, "என்னை மன்னராகக் குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் அல்ல" என்றார் டிரம்ப்.

மேலும் போராட்டம் குறித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றையும் அவர் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். போர் விமானத்தில் டிரம்ப் பறப்பது போல காணொளியில் இடம்பெற்றுள்ளது. போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பறக்கும் அந்த விமானத்திலிருந்து கழிவுகள் கொட்டப்படுவதுபோல காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளியையே டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

Donald Trump | United States of America | No Kings |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in