
அரசுமுறைப் பயணமாக இன்று (ஜூலை 25) மாலத்தீவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
அதிபர் மொஹமத் முய்சுவின் அழைப்பின்பேரில் மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, நாளை (ஜூலை 26) நடைபெறவுள்ள அந்நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
கடந்த 2014-ல் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். மேலும், மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். மிகவும் குறிப்பாக, கடந்த நவம்பர் 2023 அன்று முய்சு பதவியேற்ற பிறகு மாலத்தீவு செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
லண்டனில் இருந்து கிளம்பி மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் கூட்டாக வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து, அதிபர் மொஹமத் முய்சுவுடன் விரிவான கலந்துரையாடலை பிரதமர் மோடி மேற்கொண்ட பிறகு, இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வின்போது மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 72 கனரக வாகனங்களை இந்தியா வழங்கியது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்தியா வழங்கிய கடனுதவியால் கட்டப்பட்ட 3,300 வீடுகளை அந்நாட்டு அரசிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்வும் நடந்தேறியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையிலும், இந்தியா-மாலத்தீவு வர்த்தக ஒப்பந்தத்திற்கான (IMFTA) முறையான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.