
மலாவி நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாஸரஸ் சக்வேரா அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மலாவி நாட்டின் துணை அதிபராக இரண்டாவது முறையாக செயல்பட்டு வந்தார் சவுலோஸ் சிலிமா. கடந்த ஜூன் 11-ல் சிலிமாவைச் சுமந்து கொண்டு, தலைநகர் லிலாங்வேயிலிருந்து கிளம்பிய ராணுவ விமானம் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்த முசுசு நகருக்குச் சென்றது. மோசமான வானிலை காரணமாக முசுசு விமான நிலையத்தில் தரையிறங்காத விமானம், சில நிமிடங்களில் ரேடார்களின் கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது.
விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்நாட்டு ராணுவத்தால் அருகிலிருந்த மலைப்பிரதேசத்தில் நீண்ட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதலின் முடிவில் நொறுங்கிய நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. சிலிமாவுடன் விமானத்தில் இருந்த மற்ற 9 நபர்களும் மரணமடைந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விமான விபத்து நடந்திருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
2014 முதல் 2019 வரை, முதல் முறையாகத் துணை அதிபர் பதவி வகித்த சிலிமா பிறகு கட்சி மாறி, தற்போது அதிபராக இருக்கும் லாஸரஸ் சக்வேராவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அந்நாட்டின் துணை அதிபராகச் செயல்பட்டு வந்தார்.
மலாவி நாட்டு ராணுவம் மற்றும் காவல் துறைக்குத் தேவைப்பட்ட தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் செய்ததாக சிலிமா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த ஊழல் வழக்கு மீது விசாரணை நடந்து வந்த வேளையில், சிலிமா மீது வழக்கு தொடுத்த நபர்கள், கடந்த மாதம் வழக்கை வாபஸ் பெற்றனர்.