
நடந்து முடிந்த வெனிசுலா நாட்டு அதிபர் தேர்தலில் 51 % வாக்குகள் பெற்று நிகோலஸ் மடூரோ வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்நாட்டு தேர்தல் ஆணையம். மேலும் மடூரோவை எதிர்த்துப் போட்டியிட்ட எட்மன்டோ கோன்ஸாலேஸ் 44 % வாக்குகள் பெற்றுள்ளார் எனவும் அறிவிப்பு.
எதிர்பார்த்ததைவிட தேர்தல் முடிவுகள் தாமதமாக வெளியானதால் இதில் முறைகேடுகள் நடந்துள்ளன என வெனிசுலாவின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் அதிபர் தேர்தலில் கோன்ஸாலேஸுக்கு 70 % வாக்குகளும், மடூரோவுக்கு 30 % வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும் என்று கூறுகின்றன எதிர்க்கட்சிகள்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அந்நாட்டில் மாதம் 200 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கும் மக்கள் கூட தங்கள் வாழ்க்கையை நடத்த பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
2013-ல் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் புற்று நோயால் மரணமடைந்தபோது துணை அதிபர் பதவியில் இருந்தார் நிகோலஸ் மடூரோ. இதைத் தொடர்ந்து அதே வருடம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் மடூரோ.
வெனிசுலா நாட்டு பொருளாதாரம் அந்நாட்டு எண்ணை வளத்தை நம்பி உள்ளது. 2014-ல் சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தததால் கடுமையான பாதிப்புக்குள்ளானது வெனிசுலாவின் பொருளாதார நிலை. 2017-ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு பொருளாதாரம் மேலும் சரிவடைந்து பணவீக்கம் உச்சநிலையை எட்டியது.
2013-ல் அந்நாட்டு மக்கள் 33 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்குக் கீழ் இருந்தனர். இதன் பிறகு மடூரோவின் தவறான நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் இன்றைய நிலைப்படி 82 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கின்றனர். பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பொருளாதார சிக்கல்களை அடுத்து மடூரோவுக்கு எதிராக இத்தனை வருடங்களாக பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் நடத்தும் போராட்டத்தை அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் வெற்றிகரமாக அடக்கி வருகிறார் மடூரோ.
அதிபர் தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றதை அடுத்து பிற தென் அமெரிக்க நாடுகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.