ஜி7 உச்ச மாநாட்டில் அவசியம் இந்தியா இடம்பெறவேண்டும்: கனடா பிரதமர் அழைப்பு!

ஜி7 உச்ச மாநாட்டில் அவசியம் இந்தியா இடம்பெறவேண்டும்: கனடா பிரதமர் அழைப்பு!

5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது, மேலும் அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடாகவும் இருப்பதால், பல்வேறு விநியோக சங்கிலிகளின் மையப்பகுதியில் இந்தியா இருக்கிறது.
Published on

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்ச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைத்த விடுப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

உலக வல்லரசு நாடுகள் பங்கேற்கும் 51வது ஜி7 உச்ச மாநாடு வரும் ஜூன் 15 முதல் 17 வரை, கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தின் கனனாஸ்கிஸ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் பிற நாடுகளில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

அதேநேரம் காலிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவிற்கும், கனடாவிற்குமான அரசுரீதியிலான உறவுகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் பதவிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றார்.

இதனால் இரு நாட்டு உறவுகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஜி7 உச்ச மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி முறைப்படி அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

`சில நாடுகள் ஜி7 விவாதங்களின்போது அவசியம் இடம்பெற்றிருக்கவேண்டும். உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது, மேலும் அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடாகவும் இந்தியா இருப்பதால், பல்வேறு விநியோக சங்கிலிகளின் மையப் பகுதியில் அது உள்ளது. எனவே இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்படுவது அர்த்தமுள்ளதாகிறது’ என்றார்.

இந்நிலையில் இது குறித்து தன் எக்ஸ் கணக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரிடம் வாழ்த்து தெரிவித்தேன், அத்துடன் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்தேன்.

மக்களுக்கு இடையேயான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்ட, துடிப்பான ஜனநாயக நாடுகளான இந்தியாவும் கனடாவும், பரஸ்பர மரியாதை மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆர்வங்களால் வழிநடத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சி மாநாட்டில் எங்களது சந்திப்பை எதிர்நோக்குகிறேன்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in