லெபனானில் பேஜர்களைத் தொடர்ந்து சிறிய வகை ரேடியோக்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.
இதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள், 450 பேர் காயமடைந்துள்ளார்கள்.
கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மற்றும் காஸாவிலுள்ள ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து, லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா ஆயுதக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹெஸ்புல்லா ஆயுதக் குழு காஸாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.
இந்தச் சூழலில் தான் லெபனானில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன. இதில் குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தார்கள். பேஜர்கள் வெடித்ததன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் இருப்பதாக ஹெஸ்புல்லா குற்றஞ்சாட்டியது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் பயன்படுத்தும் சிறிய ரக ரேடியோக்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள். இரண்டு நாள்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் மூலம் மொத்தம் 32 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தாக்குதல்கள் அரங்கேறி வருவது உலகளவில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.